ராக்கா:
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பெண் நிருபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரத்தில் வைஃபை இன்டர்நெட் சேவையை தடை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் அந்த வைஃபை சேவை ராக்கா நகரத்தில் துண்டிக்கப்பட்டது.
இதை அந்நாட்டில் தனிப்பட்ட முறையில் பணியாற்றி வந்த பெண் நிருபர் ருக்யா ஹசன், தனது பேஸ்புக்கில் கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த பெண் நிருபரை கடத்தி கொலை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் கொல்லப்பட்ட 5 உள்நாட்டு நிருபர்களில் முதல் பெண் நிருபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ருக்யா ஹசன் கொலை செய்யப்பட்டதை அந்த நகர செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. செய்தி நிறுவன நிறுவனர் அபு முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் ருக்யா ஹசனின் இறுதி பேச்சை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ நான் ராக்காவில் இருக்கிறேன். எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் என்னை கைது செய்து கொலை செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. எனது தலையை வெட்டி விடுவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் எப்போது கொலை செய்யப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் சமூக வளை தளங்களில் அவரது செயல்பாடு கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதியும் நின்றுள்ளது. ‘‘ கடந்த 3 நாட்களுக்கு முன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஹசன் குடும்பத்தாரிடம் அவர் கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர்’’ என்று அரபு செய்தி சேனல் அல்&ஆன் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.