
சென்னை:
சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டார்.
இன்று காலை 10.30 மணி அளவில் டில்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.
இந்த விமானம் மதியம் 1 மணி அளவில் டில்லி விமான நிலையத்தை அடைந்த உடன் அங்கிருந்து கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ தலைமை அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.
அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் டில்லி பாட்டியாலாவில் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.
2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்தி, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டைப் பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றுத்தர கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டன்ட் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இதன் காரணமாக கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் அனுமதியின் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, விசாரணைக்காக அவரை சிபிஐ அதிகாரிகள் டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்குமூலத்தை தொடர்ந்தே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]