வண்டலூர்:
காஞ்சீபுரத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் அவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போதும் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்வதற்காக நேற்று காலை சென்னை கிண்டியில் இருந்து கார் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புறப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக வண்டலூர் அருகே படப்பையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆளுநர் ஆய்வு செய்யவதாக இருந்த்து.
இதனை அறிந்ததும் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் படப்பை கூட்டு சாலில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடியுடன் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க தொண்டர்கள் ஒரு சிலர் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த கருப்புக்கொடிகளை கவர்னரின் கார் மீது வீசினார்கள். ஆனால் கொடி கார் மீது விழாமல் கீழே விழுந்தது. கார் நிற்காமல் சென்று விட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்களை அளித்தார். பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார்.
காஞ்சீபுரத்திலும் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டினர். தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில் நடந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி. அரசு, புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே காஞ்சீபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆளுநர் கலந்துகொண்டார். அப்போது மாணவிகள் கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார். . அதனைத் தொடர்ந்து கருக்குப்பேட்டை, திம்மையன்பேட்டை ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஆளுநர் திறந்துவைத்தார்.
பிறகு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.