நைஜீரியாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 110 பேரை போபோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு 276 மாணவகிளை கடத்திச்சென்ற நிலையில், தற்போது மீண்டும் 110 மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களது படைக்கு தேவையானவர்களை கடத்திச்சென்று, மூளைச்சலவை செய்து, தங்களது இயக்கத்தில் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு போர்னோ மாகாணம் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஒருசிலர் தம்பித்து வந்த நிலையில், மற்றவர்களின் கதி என்ன? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் அரசு பள்ளியில் படித்து வந்த 110 மாணவிகளை கடத்திச்சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நைஜிரியாவின், சிபோக் நகரில் இருந்து 275 கி.மீ தொலைவில், யோப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ள தாப்சி நகர அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்ட போகோஹரம் பயங்கரவாதிகள், அங்கிருந்து 110 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் ராணுவ விமானங்களில் தாப்சி நகருக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகளை நைஜிரிய அரசு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டு கலாசாரத்துறை அமைச்சர் அல்ஹாஜி லாய் முகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், , 910 பேர் பயின்று வந்த அந்த பள்ளியிலிருந்து 110 மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு பகுதியினர், நைஜர் நாட்டுக்கும் மற்றொரு பிரிவினர் போர்னோ மாகாணத்திற்கும் போகோ ஹரம் பயங்கர வாதிகள் அழைத்துச்சென்றுள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறி உள்ளார்.