லாங்பீச், கலிபோர்னியா
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் குடிபோதையில் குதிரை மீது ஏறிவந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
நெடுஞ்சாலை என்பது பல வாகனங்கள் பயணம் செய்யும் சாலைகள் என்பதும் அது எப்போதும் பரபரப்பான ஒரு இடம் என்பதும் அனைவரும் அறிந்ததே. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானதே. அவ்வகையில் கலிபோர்னியா நாட்டில் லாங்பீச் என்னும் இடத்தில் உள்ள ஸ்டேட் ரூட் 91 என்னும் சாலையில் சனிக்கிழமை இரவு பல வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தன.
அப்போது திடீரென ஒருவர் தனது குதிரை மீது ஏறி இந்தச் சாலையில் பயணம் செய்துள்ளார். இதனால் அந்த சாலையில் பரபரப்பு உண்டானது. அவரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்து சிறைக்கு அனுப்பப் பட்டார்.
குதிரை சாலையில் பல வாகனங்களுக்கிடையில் செலுத்தப் பட்ட போதிலும் அதற்கு அடிபடாமல் தப்பித்துள்ளது. கூரா எனப் பெயர் கொண்ட அந்த வெள்ளைக் குதிரை அதை ஓட்டி வந்தவரின் தாயிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இது குறித்து கலிபோர்னியா நெடுஞ்சாலை காவல் துறை டிவிட்டரில், “கலிபோர்னியா நெடுஞ்சாலைகளில் குதிரை சவாரி செய்யாதீர்கள், குறிப்பாக போதையில் செய்யவே செய்யாதீர்கள்” என பதிவிட்டுள்ளனர்.