பெங்களூரு:
‘‘வேட்பாளர் முக்கியமல்ல. மோடியும் தாமரையும் தான் முக்கியம்’’ என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடக்கவுள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா தென் மாநிலங்களில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இந்த வகையில் தேர்தல் நடக்கவுள்ள கர்நாடகா மாநிலத்தக்கு வந்தார். அங்கு தக்ஷினா கன்னடா மாவட்டம் பந்த்வால் பகுதியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று பார்க்க வேண்டாம். தாமரை சின்னத்தையும், மோடி புகைப்படத்தை மட்டுமே பாருங்கள். நீங்கள் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்ள தேவையில்லை. பூத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இது போல் பல பூத்களில் வெற்றி பெற்றால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்’’ என்றார்.
கர்நாடகாவில் 56 ஆயிரம் பூத்கள் இடம்பெறுகிறது. ஒரு பூத்துக்கு சுமார் ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். கர்நாடகாவில் 49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளராக 74 வயதாகும் எடியூரப்பாவை முன்னிறுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.