டில்லி:

2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 80 சதவீதம் தூய்மை அடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச தொழில் மாநாட்டின் நிறைவு விழாவில் மத்திய நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு துறை அமைச்சர் நிதின்கட்காரி பேசுகையில், ‘‘கங்கை நதி 10 நகரங்களால் 70 சதவீதம் மாசு அடைந்துள்ளது. இதில் கான்பூர் நகரமும் ஒன்று.

கங்கை மறு சீரமைப்பு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கங்கை 80 சதவீதம் தூய்மை அடையும். கார்பரேட் நிறுவனங்களின் சமூக சேவை பணிகளின் ஒரு ப குதியாக கங்கை நதி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

கங்கை நதி கரைகளில் அமைந்திருக்கும் அனைத்து கிராமங்களும் ‘கங்கா கிராம்ஸ்’ என மாற்றப்பட்டு நூறு சதவீத கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கார்பரேட் சமூக சேவை திட்டத்தில் 12 நிறுவனங்கள் முன் வந்து ரூ. 3 ஆயிரம் கோடியை இந்த கிராமங்களுக்கு செலவு செய்துள்ளன. 1.8 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றால் விவசாய வளர்ச்சி 4 சதவீதம் அதிகரிக்கும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘99 பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் எங்கும் கட்டப்படவில்லை. குழாய்கள் மட்டுமே அமைக்கப்படுகிறது. இது செலவை மிச்சப்படுத்துகிறது. ரூ. 8 லட்சம் கோடியில் நதிகள் இணைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற 5 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

பொது போக்குவரத்தில் மின்மயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கேபிள் கார், போட்ஸ் போன்றவற்றை மலைப் பிரதேச பகுதிகளில் பயன்படுத்துவதன் மூலம் மாசு பாதிப்பை தவிர்க்கலாம். இமாச்சல், காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இதில் முதலீடு செய்வோருக்கு மாநில அரசுகள் வரி விலக்கு மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

புல்லட் ரெயில்கள் மெட்ரோ நகரங்களை இணைக்க மட்டுமே செயல்படுத்தப்படும். மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு செலவாகும் 10ல் ஒரு பங்கு மட்டுமே மோனோ ரெயில், போட்ஸ் போன்றவற்றை அமைக்க தேவைப்படும். அதனால் இவற்றை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.