டில்லி:
நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது ஆதார் தகவல்களை கட்டாயம் பதிவிட வேண்டும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் எனப்படும் மருத்துவ கல்வி நுழைவு தேர்வு மூலமே தேர்வுசெய்யப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் நீட் நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் பிப்ரரி 9ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 9ந்தேதி இதற்கு கடைசி நாள். நீட் நுழைவு தேர்வு மே 6ந்தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. .
அதில், ‘நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
‘அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.