துபாயில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1963ல் தமிழ்நாட்டில் சிவகாசி நகரில் பிறந்தவர் ஸ்ரீதேவி. இவர், 1967ல் ;துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் `கந்தன் கருணை எம்ஜிஆருடன் நம்நாடு சிவாஜிகணேசனுடன் வசந்தமாளிகை போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான `16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானார்
கமலுடன் `சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், குரு,வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை ஆகிய வெற்றிப் படங்களிலும், ரஜினியுடன் `தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பிறகு இந்தித் திரைப்படங்களிலும் பிரபல நாயகர்களுடன் நடித்தார். மேலும் கன்ன்டம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தார்.
திருமணத்துக்குப் பிறகு திரைத்துறையைவிட்டு ஒதுங்கி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற இந்தித் திரைப்படத்திலும், தமிழில் விஜய்யின் `புலி படத்திலும் நடித்தார்.
இவரது டிப்பில் கடைசியாக வெளியான படம் மாம். இது அவருடைய 300ஆவது படமாகும்.
சிறந்த நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், ஆறு முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது.
ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர் .
துபையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது நேற்று இரவு 11 மணி அளவில் மாரடைப்பால் மரமடைந்தார்.
இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டரில், ஸ்ரீதேவி மறைந்த நாள் கருப்பு தினம் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா தனது டிவிட்டரில், வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை உணர்த்துகிறது ஸ்ரீதேவியின் மரணம் என்று பதிவிட்டுள்ளார்.
சுஷ்மிதா சென், இந்த நாள் மிக துக்ககரமான நாள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல பிரபலங்கள் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.