டில்லி:
மத்திய பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்ட 150 ஆயுர்வேதா மற்றும் யுனானி கல்லூரிகளில் குறைந்தபட்ச தரம் கூட இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 150 ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய பாரம்பரிய மருத்துவ ஒழுங்கு முறை அமைப்பான மத்திய இந்திய மருத்துவ குழு அனுமதி வழங்கியுள்ளது. இதில் பல கல்லூரிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், நோயாளிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒழுங்கு முறை அமைப்பில் உள்ள ஒரு பிரிவினரே இந்த புகாரை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழு முன்னாள் தலைவர் வேத் பிரகாஷ் தியாகி கூறுகையில், ‘‘பாரம்பரிய மருத்துவ முறைக்கு மோடி அரசு அதிக ஆதரவு அளித்து வருகிறது. 2014ம் ஆண்டு மத்தியில் இருந்து 2018ம் ஆண்டு தொடக்கம் வரை 150 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுளளது.
முன்பு 300 என்று இருந்த இதன் எண்ணிக்கை தற்போது 450ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த கல்லூரிகளில் மாணவ மாணவிகள் எத்தகைய கல்வியை பெறுவார்கள் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேதாவை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. ஆனால், தவறான வழியில் இதை மேற்கொள்கிறது’’ என்றார்.
இந்த குழு மத்திய ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். குறைந்தபட்ச தகுதிகள் கூட இல்லாத கல்லூரிகளுக்கு இந்த குழுவின் தற்போதைய தலைவர் வனிதா முரளிகுமார் அனுமதி வழங்குவதாக பிரதமருக்கு தியாகி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.