சென்னை:
இன்று காலை டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தொகுதி பிரச்சினைகளை தீர்க்க டிடிவியால்தான் முடியும் அதன் காரணமாக டிடிவிக்கு ஆதரவு என கூறினார்.
டிடிவியை சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரபு, மக்கள் ஆதரவு இல்லை என்று கூறித்தான் அதிமுகவில் இருந்து சசிகலாவையும், டிடிவி தினகரனையும் நீக்கினார்கள். ஆனால் மக்கள் ஆதரவு அவர்களுக்குத்தான் உள்ளது என்பது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிரூபணமாகி உள்ளது. இதுவே முன்னுதாரணம்.
என்னை ஜெயலலிதா கள்ளக்குறிச்சி தொகுதிக்கு தேர்வு செய்தது மக்களுக்கு நன்மை செய்யத்தான். எனது தொகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றவே மக்களும் எனக்கு வாய்ப்பு அளித்தார்கள். ஆனால் என்னனால் மக்கள் சேவை செய்ய முடியவில்லை.
மாவட்டத்தில் பல பிரச்சினைகள் ஆனால் எனக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டபோது டிடிவிதான் என்னை கூப்பிட்டு பேசினார்.
ஆகவே, தற்போதும் தொகுதி பிரச்சினை தீர்க்க மக்கள் ஆதரவு பெற்ற டிடிவி தினகரன், சசிகலாவால் மட்டுமே முடியும். அவர்களால் கண்டிப்பாக தொகுதி பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்றார்.
நான் இதுவரை முதல்வருடன்தான் இருந்தேன். ஏற்கனவே கள்ளக்குறிச்சி தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் செய்கிறேன் என்று கூறி வருகிறார்.
தற்போது நான் சொந்தமாக முடிவெடுத்துதான் டிடிவியை சந்தித்தேன். தனிப்பட்ட நபரின் விறுப்பு வெறுப்புக்காக நான் வரவில்லை. யாரை பற்றியும் தவறாக பேச வரவில்லை என்ற பிரபு, எனது தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே டிடிவியை சந்தித்தேன் என்றார்.
அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை மக்கள் ஆதரவு டிடிவிக்கு உள்ளது
அதிமுகவை வழி நடத்த நல்ல தலைமை தேவை. அதற்கான தகுதி சசிகலா மற்றும் டிடிவியிடம்தான் உள்ளது என்ற பிரபு, எடப்பாடி முதல்வராக வருவார் என்று யாராவது நினைத்தீர்களா…. என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதுபோல 18 எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராவார் என்று அதிரடியாக கூறினார்.
மேலும், என்னை டிடிவி வழி நடத்துவார்…. சின்னம்மா வழியில்தான் இந்த இயக்கம் நடக்கும் என்ற பிரபு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சீக்கிரம் வாங்க…. என்று மற்ற எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆட்சியின் மீதமுள்ள 3 வருடத்தில் ஜெ.வின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டுமானால் சசிகலா டிடிவி தினகரன் தலைமையில்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.