
பெங்களூரு:
காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை ஏற்கனவே இருந்ததை விட குறைத்தும், கர்நாடகாவுக்கு அதிகரித்தும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கர்நாடகாவில் வரவேற்றுள்ளனர்.
இதன் காரணமாக இரு மாநிலங்கள் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் தமிழகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி வரும் 25ந்தேதி பெங்களுரில் பேரணி நடத்த தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ராசன், கர்நாடகாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, கோலார் தங்கவயல், ஷிமோகா போன்ற பகுதிகளில் அதிக அளவிலான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
ஏற்கனவே கோகாக் அறிக்கை காரணமாக ஏற்பட்ட வன்முறை மற்றும் காவிரி கலவரம் போன்றவற்றால் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், ஏராளமான தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகாவில் சிறுபான்மையினமாக வாழ்ந்து வரும் தமிழர்கள், அகதியாகு அவலநிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழ்ந்து வரும், மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரிவரும் 25-ம் தேதி பெங்களூருவில் ‘தமிழர் பாதுகாப்பு பேரணி’ நடத்த இருப்பதாக கூறினார்.
இந்த பேரணி பெங்களூருவின் முக்கிய சாலைகளின் வழியாக மாளிகைக்கு சென்று, அங்கு ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் கோரிக்கை மனு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.