டில்லி
சரியாக அழிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்கள் பல அபாயத்தை உண்டாக்கும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி எச்சரித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை அமைச்சராக உள்ளவர் மேனகா காந்தி. பாஜகவை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மருமகள் ஆவார். இவர் மகன் வருண் காந்தி பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நேற்று மேனகா காந்தி “ஷி விங்க்ஸ் காம்பெய்ன்” என்னும் பெண்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாறினார்.
மேனகா காந்தி தனது உரையில், “சரியாக அழிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்களால் பல அபாயங்கள் உண்டாகின்றன. குளங்கள் மட்டும் ஆறுகளில் இவைகள் தூக்கி எறியப்படும் போது இவைகள் நீர் செல்லும் பாதைகளில் அடைப்புக்களை உண்டாக்குகின்றன. நிலத்தில் எறியப்படும் போது சுகாதாரக் குறைபாடு ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கள் உண்டாகும் அபாயம் உள்ளது.
மாதவிலக்கு என்பது ரத்த சேதம் மட்டும் இன்றி சுகாதாரக் கேடும் ஆகும். அந்த நேரத்தில் எவ்வாறு சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பதை அரசு கடந்த நான்கு வருடங்களாக மகளிர் மத்தியில் தெளிவு படுத்தி உள்ளது. மகளிருக்கு ஏதும் செய்ய வேண்டும் எனில் அவர்களுக்கு மாதவிலக்கு கால சுகாதாரத்தைப் பற்றி புரிய வைத்தால் போதும்மானது.
தற்போது சானிடரி நாப்கின்கள் விற்பனை பெருமளவில் வெளிநாட்டுக் நிறுவனங்களே செய்து வருகின்றன. அதனால் 12% ஜி எஸ் டி விதிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் பயனடைந்து இந்தியாவில் உள்ள ஓரிரு நிறுவனங்களும் அழிந்து விடும்.
திட்டக் கமிஷனுடனும் மற்ற அமைச்சகங்களுடனும் இணைந்து விரைவில் சானிடரி நாப்கின்கள் விற்கும் மற்றும் அழிக்கும் இயந்திரங்களை நிறுவ எனது அமைச்சகம் திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.