மும்பை

நிரவ் மோடியின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளில் குறைந்த விலை வைர நகைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி, மற்றும் அவர் பங்குதாரர் மெஹுல் சோக்சி நடத்தும் நகைக்கடை கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகள் ஆகும்.    வங்கிக்கு வர வேண்டிய பணத்துக்காக அந்த நகைக்கடைகளில் உள்ள வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   தற்போது அந்த நகைகள் அமலாக்கப் பிரிவினரால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

அதிகமான நகைகள் ஐதராபாத்திலும் அதையடுத்து மும்பை மற்றும் சூரத் நகரங்களிலும் இருந்து பறிமுதல்ச் எய்யப்பட்டுள்ளன.    இதில்  அந்த நகைகளில் குறிப்பிட்டுள்ள விலையின்படி ரூ. 6000 கோடி என கூறப்பட்ட ஐதராபாத் கடை நகைகள் மதிப்பீட்டின் போது உண்மையான மதிப்பு சுமார் ரூ.1500-2000 கோடிகள் மட்டுமே என தெரிய வந்துள்ளது.    அது மட்டுமின்றி இன்னும் நகைகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படாததால் இது குறித்த விவரம் முழுமையாக அறியப்படவில்லை.

ஒரு சில இடங்களில் ரூ. 100 கோடி என விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த நகைகளின் உண்மையான மதிப்பு வெறும் ரூ. 25 கோடியாக இருந்துள்ளது.   அத்துடன் மகாராஷ்டிராவின் உட்பகுதியில் இருந்த ஒரு சிறு கடையில் கைப்பற்றப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புள்ள நகைகளின் உண்மையான மதிப்பு ரூ. 17 லட்சமாக இருந்துள்ளது.

இதன் மூலம் இந்த நகைக்கடைகளில் குறைவான மதிப்புள்ள வைரநகைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.    பல இடங்களில் ரூ.10000 மதிப்புள்ள வைர நகைகள் ரூ. 50000  என்னும் விலைச் சீட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.