டில்லி :
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையில் காலை 11 மணிக்கு ரேடியோ மூலம், பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரபேல் விமான ஊழல் மற்றும் நிரவ் மோடி குறித்து மோடி பேச வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி விடுத்துள்ளார்.
அதன்படி இந்த மாதம் 25 ம் தேதி நடைபெற உள்ள மான்கி பாத் நிகழ்ச்சியில் தான் எதுகுறித்து பேச வேண்டும் என்பது குறித்து கருத்து சொர்லும்படி, மோடி, தனது டுவிட்டர் பதிவில் கடந்த 14ந்தேதி அன்று பதிவிட்டிருந்தார்.
மேலும், 1800-11-7800 என்ற எண்ணிற்கு போன் செய்தும், ஆப் மூலமும் மக்கள், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மோடியின் டுவிட்டர் பதிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி விடுத்துள்ளார்.
அதில், மன் கி பா நிகழ்ச்சியில் பேசுவதற்காக கடந்த மாதம் நான் கூறிய கருத்தை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். பிறகு ஏன் யோசனை சொல்லும்படி மக்களிடம் கேட்கிறீர்கள் என்று கேள்வி விடுத்துள்ளார்.
நீங்கள் எதைப் பற்றி பேச வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்ப்பது உங்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டுள்ள ராகுல், அது, நிரவ் மோடியின் ரூ.22,000 கோடி கொள்ளை மற்றும் நாட்டை விட்டு தப்பி ஓடியது, ரபேல் விமானம் வாங்கியதில் நடைபெற்ற ரூ.58,000 கோடி முறைகேடு குறித்துதான் நீங்கள் பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நானும் உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.