ராமேஸ்வரம்:
தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள கமல்,அப்துல் கலாம் சகோதரரிடம் ஆசி பெற்று விட்டு மீனவ பிரதிநிதிகளுன் பேசினார். அப்போது, 2 நிமிடம் மட்டுமே மீனவர்களிடம் பேசிவிட்டு, மீண்டும் வேறு ஒரு நாளில் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் கமல். இது மீனவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கமலை சந்தித்த மீனவ பிரநிதிகள், கமல் எங்களுக்கு சாதகமாக செயல்பட்டால் அவருடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து, மீனவ சங்க பிரதிநிதிகள் கமல் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை சந்தித்து கோரிக்கள் அடங்கிய மனுவை அளித்தனர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமலுடன் மீனவர்கள் சந்திப்பு மீண்டும் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது பேசிய, மீனவ சங்க பிரநிதி போஸ், இலங்கை அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகை விடுவிப்பதற்கு 2 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால், இதனை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. தற்போது நாங்கள் மீன் பிடிக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். அரசாங்கம் எங்களுக்கு ஒரு மாற்று வழி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், அரசு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து மத்திய அரசு பலமுறை கூட்டத்தைக் கூட்டி எங்களை அலைக்கழித்து வருகிறது. எங்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவரா4 பேசும்போது, உங்களை மடியேந்தி பிச்சைக் கேட்கிறேன், அங்கே போய் மீன் பிடிக்காதீர்கள் என்று கெஞ்சி கேட்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவர் எங்களிடம் பேசும்போது, உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்றார்…. நாங்கள் என்ன செய்வது? தற்போது கமல் மீனவர்கள் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளதால் எங்கள் பிரச்சனை உலக அளவில் பேசப்படும் என்று எண்ணுகிறோம்.
எங்களை (மீனவர்களை) பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியிலும் சேரவில்லை. எங்களுக்கு கமல் நல்லது செய்வார் என்ற எண்ணம் உள்ளது. கமல் எங்களுக்கு சாதகமாக செயல்பட்டால் அவருடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.