கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் காதலர் தினத்தன்று ஆசிரியர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவிக்கு, ரோஜாப்பூ கொடுத்து காதலிக்க கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, அந்த ஆசிரிரை அடித்து உதைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோனியார் என்ற தனியார் பள்ளியில், அந்த பகுதியை சேர்ந்த  மாணவி ஒருவ்ர  8ம் வகுப்பு படித்து வருகிறார்.

13வயதான அந்த மாணவிக்கு காதலர் தினத்தன்று (14ந்தேதி) மற்ற மாணவ மாணவிகள் முன்னிலையில் 46 வயதான ஆசிரியர் நிர்மல் என்பவர் வலுக்கட்டாயமாக ரோஜாப்பூவும், சாக்லெட்டும்  கொடுத்து, தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மேலும்  இரண்டு ஆசிரியர்கள், ஆசிரியர் நிர்மலுக்கு ஆதரவாக அந்த மாணவியை தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி இரண்டு நாட்கள் கழித்து, தனது பெற்றோரிடம் ஆசிரியர்களின் தொல்லை குறித்து தெரிவித்தார்.

அதையடுத்து, மாணவியின் பெற்றோர் உள்பட ஊர்மக்கள் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியினுள் புகுந்து ஆசிரியர் நிர்மல் குமாரை சரமாரியாக தாக்கினர்.

ஆசிரியர் நிர்மல் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் காட்சி

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி மற்றும்  போலீசார் விரைந்து வந்து ஆசிரியர் நிர்மல் குமார் மற்றும்  அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் 2 ஆசிரியர்களையும் கைது செய்த  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது மாணவிக்கு 46 வயதான ஆசிரியர் ரோஜாப்பூ கொடுத்து காதலிக்க வற்புறுத்தி செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.