13-1436763266-money7354-600
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை தமிழகத்தில் பெரு மழை பெய்தது. அதோடு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து “வெள்ளத்தில் வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கும். நிவாரண நிதியும் குடிசைகளை இழந்த மக்களுக்கு நிரந்தர வீடும் கட்டித் தரப்படும்” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு 5000 ரூபாயும், குடிசைகளை இழந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 கிலோ அரிசி, மற்றும் ஒரு வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன்படி 30 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 14 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது.
வங்கி இருப்பில் வரவு வைக்கப்பட்டது குறித்து எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது. இதையடுத்து ஏடிஎம் மையங்களில் மக்கள் குவிந்தனர்.
சில ஏடிஎம்களில் பணம் தீர்ந்துவி்ட்டதால், காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.