பெங்களூரு:

காவிரி மேல் முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை உச்சநீதி மன்றம் குறைத்துள்ளது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ரஜினியும் இரவில், தமிழகத்துக்கு ஆதரவாக  தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில்,  கன்னட அமைப்பினர்  ரஜினி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

காவிரி நீர் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு அளிக்கப்படும் நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசனும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருந்தார். இதன் காரணமாக, அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினியின் கருத்தை கேட்க செய்தியாளர்கள் போயஸ் தோட்டத்தில் தவமிருந்தனர்.

காலை 11 மணிக்கே தீர்ப்பு வெளியான நிலையில்,  வெகுநேரமாக அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், நேற்று இரவு தனது டுவிட்டர் பதிவில் ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருந்தார்.

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

 

இது கர்நாடகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே காவிரி பிரச்சினையில், கர்நாடகாவுக்கு ஆதரவாக அங்கேயும், தமிழகத்திற்கு ஆதரவாக இங்கேயும் நாடகமாடி வந்த ரஜினி, தற்போது ஆன்மிக அரசியல் தொடங்கு வதாக அறிவித்துள்ளதால் அவர் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினிகாந்த், காவிரி தீர்ப்பு குறித்து,  தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதால்  கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதை கண்டித்து பெங்களூருவில் உள்ள  சன்னப்பட்னா நகரில்  ரஜினியின் உருவ பொம்மை மற்றும்  படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.