டில்லி
மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின் மத்திய அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு செலவிடும் பணம் அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக மொத்தம் 3.13 கோடி வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இதில் 46% வழக்குகளை மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த வழக்குகள் நடத்த வழக்கறிஞர்களுக்கு செலவிடப்படும் தொகை குறித்து கேள்வி ஒன்றுக்கு அரசு பதிலளித்துள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இந்த பதிலை அளித்துள்ளது.
“மத்திய அரசு வழக்கறிஞர்களுக்காக செலவிடும் தொகை கடந்த 4 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டும் இந்த கட்டணம் ரூ. 28.46 கோடியாக இருந்தது. 2017-18 ஆம் ஆண்டுகளில் இது ரூ. 54.37 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல திட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதே காரணம் ஆகும்.
ஆதார், முத்தலாக், பணமதிப்பிழப்பு, என பல திட்டங்களுக்கும் எதிர்த்து வழக்குகள் உள்ளன. ஆதார் க்கு எதிராக 27 வழக்குகள் கடந்த 2012லிருந்து நிலுவையில் உள்ளன உள்ளன. மத்திய ரெயில்வே துறைக்கு எதிராக 70 ஆயிரம் வழக்குகள் உள்ளன. மத்திய நிதித்துறைக்கு எதிரக 15700 வழக்குகள் உள்ளன.”
இவ்வாறு அந்த பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.