ஹோஸ்பெட்
பிரதமர் மோடி அரசாட்சி பற்றி சித்தராமையாவிடம் கற்றுக் கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
கர்னாடகாவில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காக கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. பாஜக சார்பில் பிரதமர் மோடி தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையிலும் பரப்புரைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது கடந்த காங்கிரஸ் ஆட்சியின் குறைகள் பற்றி பேசினார். அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்திருந்தார்.
தற்போது கர்னாடகாவின் ஹோஸ்பெட் பகுதியில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர், “பிரதமர் மோடி இன்னும் முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். மோடி அவர்களே, நீங்கள் பின்புற கண்ணாடியை பார்த்துக் கொண்டே வாகனத்தை செலுத்த வேண்டாம். அது விபத்தில் போய் முடியும். நாடும் அது போலத்தான்.
மோடிஜி, உங்களை இந்த நாடு பழைய கதைகளைப் பேச பிரதமர் ஆக்கவில்லை. மாறாக எதிர்காலத்தில் இந்த நாட்டை முன்னேற்ற உங்கள் திட்டம் என்ன என தெரிந்துக் கொள்ள விரும்புகிறது. அரசாட்சி பற்றி நீங்கள் அரசை முன்னோக்கி செலுத்தும் சித்தராமையாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஊழல் பற்றி பேசும் மோடியின் கட்சித் தலவரான எடியூரப்பா ஆட்சியில் தான் உலக மகா ஊழல் நடைபெற்று அவர் பதவி இழந்தார்.
நீங்கள் இன்னொரு முறை காங்கிரசுக்கு வாய்ப்பு அளித்தால் மேலும் இருமடங்கு முன்னேற்றத்தை நாடு அடையும்” என தனது உரையில் கூறினார்.