ஜெய்ப்பூர்
அரசுக்கு எதிராக எந்த ஒரு விவகாரத்திலும் செயல்படக் கூடாது எனவும் அப்படி செய்பவர்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அரசுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் ராஜஸ்தான் காவலர்களுக்கு உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அது குறித்து அரசு காவல்துறையினர் பலர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளதாகவும், அத்துடன் காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக சமூக வலை தளங்களில் செய்திகளும், விமர்சனங்களும் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாகவும் அதிகார பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
நேற்று காவல்துறை உயர் அதிகாரி காவல்துறையினருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், “காவல்துறையினர் அரசியல் தகவல்களை முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பகிர்ந்துக் கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன. இது ராஜஸ்தான் அரசின் சிவில் சட்ட விதி 1971 இன் படியும் ராஜஸ்தான் காவல்துறை விதிகள் 1982 இன் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவையும் விமர்சிக்க அரசு ஊழியர்களுக்கு உரிமை இல்லை. அது போன்ற செய்கைகள் ஒழுங்கீனமாக கருதப் பட்டு அவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது ஆகும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். அவர்களை தடுக்க முடியவில்லை எனில் அரசுக்கு உடனைடியாக அவர்களைப் பற்றி புகார் அளிக்க வேண்டும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஓம் பிரகாஷ் கல்ஹோத்ரா, “இது புதிய உத்தரவில்லை. இந்த உத்தரவுக்கும் தற்போதைய சூழலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. அரசு இயந்திரத்தை சரிவர இயக்க அவ்வப்போது எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெகலாத், “அரசு ஊழியர்கள் சேவை விதிகளின் கீழ் வருவதால் அரசு அவர்களை சமூக வலை தளங்களில் பதிவதை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரை கட்டுப்படுத்த அரசுக்கு என்ன உரிமை உள்ளது? அரசு அனைத்துக் குடும்பத்துக்கும் பெரிய அண்ணனா? ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கண்டிக்க வேனும் எனச் சொல்ல அரசு யார்” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.