டில்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவம் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்சி சூடு நடந்தது. இதில் சிலர் இறந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராணுவ இளம் அதிகாரி ஒருவர் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து முதல்வர் மெஹபூபா முப்தி கூறுகையில், ‘‘ ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கலந்து ஆலோசித்த பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு நிர்மலா சீத்தாராமன் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்.
தற்போது இப்பிரச்னையை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கையில் எடுத்துள்ளார். பாஜக அமைச்சருக்கு எதிராக அவரே ராஜ்யசபாவில் நோட்டீஸ் கொண்டு வந்தார். ‘‘ஜனாதிபதி ராம்நாத் கோவில் அமைச்சருக்கு சம்மன் அனுப்பி ராணுவம் மீது எப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து விளக்கம் பெற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் ஜனாதிபதிக்கு புகார் கடிதமும் எழுதியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில், ‘‘ராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது குறித்து பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தினமும் காஷ்மீரில் கொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை ராணுவத்தை சோர்வடைய செய்துவிடும். அதனால் ஜனாதிபதி, அமைச்சரிடம் விசாரித்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.