சண்டிகர்:
நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் தங்களது வருமான வரியை சொந்த பணத்திலேயே செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது மக்கள் பிரதிநிதிகளுக்கான வருமான வரியை மாநில அரசு செலுத்தி வருகிறது. இது குறித்து முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், ‘‘எனக்கும், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு வருமான வரியை அரசு செலுத்தும் நடைமுறை பஞ்சாப்பில் மட்டும் தான் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.11.08 கோடியை செலுத்தி வருகிறது’’ என்றார்.
அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இதில் 10.72 கோடி ரூபாய் எம்எல்ஏ.க்களுக்கும், மீதமுள்ள தொகை அமைச்சர்களுக்கும் செலுத்தப்படுகிறது. நிதி மேலாண்மை தொடர்பாக நடந்த துணை அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு முதல்வரால் கொண்டு வரப்பட்டது’’ என்றார்.
இந்த ஒட்டுமொத்த தொகையையும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும், நலத்திட்டங்களை அமல்படுத்தவும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கட்சி பிரமுகர்களும், பணக்கார விவசாயிகளும் மானிய மின்சாரத்தை விட்டுக் கொடுக்கவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.