திருப்பதி
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவரையும் மற்றொருவரையும் ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் வசிக்கும் அஜித் திருவண்ணமலை மருத்துவக் கல்லூரியின் கல்வி கற்று வருகிறார். இத்துடன் பகுதி நேர கார் ஓட்டுனராகவும் பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு அஜித் பகுதி நேர ஓட்டுனரகா திருப்பதி அருகே காரில் சென்றுள்ளார். அவருடன் கர்னாடகாவை சேர்ந்த இயேசு என்பவரும் பயணம் செய்துள்ளார்.
வழியில் ரோந்துப் பணியில் இருந்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் காரை நிறுத்தி உள்ளனர். பிறகு செம்மரம் கடத்தியதாக அவர்கல் இருவரையும் கைது செய்துள்ளனர். ரங்கம்பேட்டை அருகே ஏழு செம்மரங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அஜித் தான் ஒரு பகுதி நேர ஓட்டுனர் மட்டுமே என்றும் தனக்கும் செம்மரக் கடத்தலுக்கும் சம்மந்தம் இல்லை என கண்ணீருடன் கூறி உள்ளார்.
இதையொட்டி அங்கு வந்த செய்தியாளர்களை காவல்துறையினர் விரட்டி உள்ளனர். அதன் பின்பு அங்கு வந்த திருப்பதி காவல் ஆய்வாளரான முரளியிடம் செம்மரக் கடத்த்தல் கும்பலை பிடிக்காமல் ஓட்டுனர் அஜித்தை பிடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.
அஜித் மற்றும் இயேசுவை அனுப்பி வைத்தவர் பெயர் பிரபு எனவும் காவல்துறையினர் அவரைப் பிடிக்காமல் கோட்டை விட்டுள்ளனர் எனவும் அங்கிருந்த செய்தியாளர்களில் சிலர் தெரிவித்தனர். மேலும் தாங்கள் பிரபுவை பிடிக்காததை மறைக்கவே அப்பாவியான மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித்தை பிடித்துள்ளதாகவும் அவரைக் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி துன்புறுத்துவதாகவும் கூறுகின்றனர்.
செம்மரம் கடத்தியதாகக் குற்றம் சாட்டி மருத்துவக் கல்லூரி மாணவர் அஜீத்தை ஆந்திர காவல் துறையினர் கைது செய்துள்ளது மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.