சென்னை,

பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வரும்  கணபதி லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக,  தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுரேஷ் என்ற  உதவி பேராசிரியர் பணியிடத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கும்போது துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்  அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், கணபதியின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனையும் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நியமன ஊழலில், துணை வேந்தர் கணபதியைத் தொடர்ந்து, மேலும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை பல்கலைக்கழகத்தின் வளாகத்துடன் முடித்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஊழலின் முழுப் பரிமாணமும் வெளிக்கொண்டு வரப்படுவதைத் தடுக்க ஆட்சியாளர்களே முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கும்போது கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்ட துணை வேந்தர் கணபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஊழலுக்கு தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ், கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இன்னொரு தரகராகச் செயல்பட்ட தொலைதூரக்கல்வி இயக்குநரும் கணபதியின் உறவினருமான மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சுவர்ணலதா ஆகியோரை காவல் துறையினர் அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் எந்த நேரமும் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் பற்றி அதிர்ச்சியான தகவல்களை காவல்துறை விசாரணையில் துணைவேந்தர் கணபதி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர் நியமன ஊழல்கள் தொடர்பாக துணைவேந்தர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ஆசிரியர் நிலையில் உள்ளவர்களைக் கைதுசெய்துவரும் காவல்துறையினர், இந்த ஊழலில் அதிகாரப் படிநிலையின் உச்சத்தில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக 2016-ம் ஆண்டில் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனுக்கு ரூ.8 கோடி கொடுத்ததாக கணபதி கூறியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, பேராசிரியர்கள் பணி நியமனத்தில் கையூட்டாக வாங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை இப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், இன்னொரு பகுதியை தேர்வுக்குழுவில் அரசாங்கப் பிரதிநிதியாக இடம்பெற்றி ருந்த பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுவாமி நாதனுக்கும் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், இந்தக் தகவல்களின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, அமைச்சர் அன்பழகனையும் எடப்பாடி ஆசிபெற்ற முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொருபுறம் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதுவரை பணி நீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை.

அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவர்களைப் பணியிடை நீக்கம்செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கணபதி சிறையில் அடைக்கப்பட்டு இரு நாள்களாகியும் அவர் இடைநீக்கம் செய்யப்படாதது, இவ்வழக்கு எந்த திசையில் பயணிக்கும் என்பதுகுறித்து எதிர்மறையான யூகங்களை ஏற்படுத்துகிறது.

பாரதியார் பல்கலைக்கழக நியமன ஊழல் என்பது புதிதாக முளைத்த விஷயமல்ல. 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது தான். இந்த ஊழலில் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டுவந்து, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதுதான் உயர் கல்வித்துறையைத் தூய்மைப்படுத்த உதவும். மாறாக, பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளை பிடித்துவிட்டு, பெருச்சாளிகளை மிகவும் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது, புதுப்புது வடிவங்களில் ஊழல்கள் தலையெடுத்து தழைத்தோங்கவே உதவும்.

பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடு கின்றன. அனைத்துக்கும் மூலமாக இருப்பதும், இருந்ததும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள்தான். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்காமல், பல்கலைக்கழக ஊழல்களைக் களைய முடியாது. எனவே, தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக…

1. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. பாரதியார் பல்கலைக்கழக ஊழலில் சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது ஊழல் வழக்குப் பதிவுசெய்து, அவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டும்.

3. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் வழங்குவதற்கு வெளிப்படையான புதிய முறை உருவாக்கப்பட வேண்டும்.

4. பல்கலைக்கழக ஊழல்களின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டுவருவதற்காக, மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு (CBI- SIT) விசாரணைக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தாமதம்செய்தால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.