சென்னை
தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு கார்பொரேஷன் ஆன டாஸ்மாக் மூலம் மதுக்கடைகள் நடத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் தினம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை ஒட்டி முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 4500 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதில் அடுத்த கட்டமாக மேலும் 500 கடைகளை மூட அரசு உத்தேசித்துள்ளது. குறைவாக விற்பனை ஆகும் கடைகளை மூட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தக் கடைகள் விரைவில் மூடப்பட உள்ளன.
எந்தெந்த கடைகள் மூடப்படுகின்றன என்னும் விவரமும், மூடப்படும் தேதியும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும், அப்படி இல்லை எனில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அறிவிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.