வுகாத்தி

ரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக தனது 15 வருட கூட்டணியை முறித்துக் கொண்டு புதுக் கூட்டணி அமைத்துளது.

நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியான நாகா மக்கள் கட்சியுடன் 15 வருடங்களாக கூட்டணியில் உள்ளது.    வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.   இந்நிலையில் சுமார் 3 வாரம் முன்பு ஆளும் கட்சியான நாகா மக்கள் கட்சியில் இருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் நெய்பியு ரியோ என்பவர் பிரிந்து புதியதாக தேசிய குடியரசு முன்னேற்றக் கட்சி என்னும் கட்சியை தொடங்கினார்.

மத்திய அமைச்சரும்,  நாகாலாந்து மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான கிரன் ரிஜ்ஜூ   நேற்று கவுகாத்தியில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், “பாஜக புதியதாக அமைக்கப்பட்ட தேசிய குடியரசு முன்னேற்றக் கட்சியுடன் வரும் சட்டப் பேரவை தேர்தலில் தொகுதி உடன்பாடு அமைத்துள்ளது.   அதன்படி மொத்தமுள்ள 60 இடங்களில் அந்தக் கட்சி 40 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட உள்ளன.   நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்று நாகாலாந்தின் ஆட்சியை கைப்பற்றுவோம் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெய்பியு ரியோ, “முந்தைய பாஜக – நாகா மக்கள் கட்சி கூட்டணி போல் இக்கூட்டணி இல்லை.   இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைய நாங்கள் முழு முயற்சியில் ஈடு பட்டுள்ளோம்.   இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.”  என கூறினார்.

நாகா மக்கள் கட்சியின் தலைவர் ஷுரோசுலி, “எங்களிடம் தொகுதி உடன்பாடு பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே திடீரென கூட்டணி பற்றி பாஜக அறிவித்துள்ளது.   எங்களுக்கு பாஜக துரோகம் இழைத்து விட்டது.    இப்போது எங்களைப் பொறுத்த வரை எல்லாம்  முடிந்து விட்டது.   நாங்கள் அனைத்து 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம்.   பாஜக கூட்டணி முறிவால் எங்களுக்கு இழப்பு இல்லை”  என  பத்திரிகையாளரிடம் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் ரிஜ்ஜு, “எங்களுக்கும் நாகா மக்கள் கட்சிக்கும் இடையே இன்னும் நட்பு தொடர்கிறது.    தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் புதிய கூட்டணி அமைத்தோம்.   மேலும் எங்கள் புதிய கூட்டளியான தேசிய குடியரசு முன்னேற்றக் கட்சியிடமும்  எங்களுக்கும் நாகா மக்கள் கட்சிக்குமான நட்பு தொடரும் என ஏற்கனவே கூறி உள்ளோம்”  என தெரிவித்துள்ளார்.