டில்லி:

மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்துக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட் தொகையில் 5.91 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது.

இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.58 சதவீதமாகும். 1962ம் ஆண்டுக்கு பின்னர் அதாவது, 55 ஆண்டுக்கு பின் தற்போது தான் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் மொத்த செலவில் 12.10 சதவீதம் ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.74 லட்சம் கோடியை விட 7.81 சதவீதம் அதிகமா கும். பின்னர் இந்த தொகை ரூ. 2.79 லட்சம் கோடியாக மாற்றி அமைக்கப்பட்டது.

மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 1.95 லட்சம் கோடி வருவாய் செலவுக்கும், 99.5 ஆயிரம் கோடி மூலதன செலவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூல தன செலவில் நவீனமயமாக்கலுக்கு 33.1 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்சனுக்கு ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 26.60 சதவீதம் அதிகமாகும். மூல தன செலவை விட பென்சனுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. பென்சனு க்கான ஒதுக்கீடு ஒரு லட்சம் கோடி ரூபாயை தொட்டது தற்போது தான் முதன் முறையாகும்.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், ‘‘எல்லைகளில் நிலவும் சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாது, ஜம்மு -காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆயுதப் படையினரின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பு உடைய நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்நாட்டில் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படும். நாட்டில் இரு இடங்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.

ராணுவத்துக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதிக்கும், திட்டங்களுக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.