வாஷிங்டன்:

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இனவெறி காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீநிவாஸின் மனைவி சுனாயனா துமலா அமைதிக்காக குரல் கொடுத்ததோடு, அமெரிக்கா பாதுகாப்பான நாடு என்று சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சுனாயனாவுக்கு அந்நாட்டு எம்.பி. கெவின் யோடர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட சுனாயானா கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் பால் ரியான், எம்.பி.க்களுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.