டில்லி,
தலைநகர் டில்லியில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 10 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இந்தியாவின் 69வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றுவார்.
அப்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும் பின்னர் வீரதீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.
இந்நிலையில், டில்லியில் நாளை நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் பலர் இந்தியா வந்துள்ளனர்.
இன்று டில்லியில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அவர்கள், நாளை இந்திய குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஆண்டு 10 கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ஆசியான் எனப்படும் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் புருனே ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.
இந்த நாட்டின் தலைவர்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.