வாஷிங்டன்

மெரிக்க  அரசு அலுவலகங்களை இயக்க தற்காலிக நிதி மசோதாவுக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர்  பதவி ஏற்றதில் இருந்து சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்ட இளம் குடியேறிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.    முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த பொது மன்னிப்பு திட்டத்தை தற்போதைய அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.    இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக  செனட் சபையில் அரசால் அளிக்கப்பட்ட நிதி மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் தோற்கடிக்கச் செய்தனர்.    நிதி மசோதா செனட் சபையில் தோல்வி அடைந்ததால் நிதி அளிக்க முடியாமல் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.     இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போனது.

தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக தற்காலிக நிதி மசோதா ஒன்று அளிக்கப்பட்டது.  அதற்கு இரு கட்சியினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.    அதையொட்டி இந்த மசோதா அதிபர் ட்ரம்ப்புக்கு அனுப்பப்பட்டு அவர் இதற்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார்.

இன்னும் இரண்டரை வாரங்கள் அரசு அலுவலகங்கள் நடக்க இந்த மசோதா மூலம் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

இந்த தற்காலிக நிதி மசோதா வுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் இளம் குடியேறிகள் பிரச்னையை அரசு ஒரு முடிவுக்கு கொண்டு வரும் என தாங்கள் நம்புவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.