மோகன்புரா, உ. பி.

திருட்டு கும்பலை நோக்கி போலிசார் சுட்ட போது 8 வயது சிறுவன் மரணம் அடைந்துள்ளான்.

உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று பதவி ஏற்றது.   அதில் இருந்து போலீஸ் என்கவுண்டர் செய்து வருவது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.    இது வரை சுமார் 900 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.   இது குறித்து முதல்வர் யோகி, “துப்பாக்கி குண்டுகளுக்கு நாங்கள் துப்பாக்கி குண்டுகளால் பதில் அளிக்கிறோம் என ஒரு முறை தெரிவித்துள்ளார்.   மேலும் 31 கொள்ளைக்காரர்களை சுட்டு வீழ்த்தி உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மோகன்புரா பகுதியில் ஒரு வயல் அருகே சில கொள்ளையர்கள் மறைவாக இருந்துள்ளனர்.   அவர்களைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அனைவரையும் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.    அங்கிருந்து தப்பி ஓடியவர்களையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.   அப்போது அங்கு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாதவ் என்னும் எட்டு வயது சிறுவன் குண்டடி பட்டு கீழே விழுந்துள்ளான்.

அந்த சிறுவனை உடனடியாக அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு எடுத்துச்    சென்றுள்ளனர்.    அங்கு அந்த சிறுவன் மரணம் அடைந்து விட்டார்.    இந்த மரணத்துக்கு காவல்துறையினரின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என மாதவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.   இது குறித்து அவர்கள் மூத்த காவல்துறை அதிகாரி சுவப்னில் இடம் புகார் அளித்துள்ளனர்.

சுவப்னில், “இந்த நிகழ்வு மிகவும் துரதிருஷ்ட வசமானது.    நான் அந்த பெற்றோருக்கு முழு ஆதரவும் அளிக்க உள்ளேன்.   இது குறித்து உடனடியாக விசாரணை நடத்து உத்தேசித்துள்ளேன்.   விசாரணை முடிவில் காவல்துறையினர் மீது தவறிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.   குழந்தையின் மரணத்துக்கு இழப்பிடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”  எனக் கூறி உள்ளார்.