டில்லி:
சர்ச்சைக்குறிய பத்மாவதி படத்தை வெளியிட 4 மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதை எதிர்த்து பத்வாத் திரைப்பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில், 4 மாநிலங்களின் தடை உத்தரவை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.
இதையடுத்து, தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கியும், படத்தின் பெயரை பத்மாவதிக்கு பதிலாக பத்மாவத் என்று வைக்கும்படி அறிவுறுத்தி படத்தை வெளியிட சான்றிதழ் கொடுத்தது.
இந்தநிலையிலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 4 மாநிலங்களில், படம் வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பத்மாவத் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், 4 மாநிலங்கள் விதித்த தடை நீக்கி அதிரடி உத்தரவிட்டனர். மேலும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களும் படத்தை வெளியிட தடை அறிவிப்பு வெளியிடவும் தடை விதித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக பத்மாவத் திரைப்படம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியாவது உறுதியாகி உள்ளது.