ஐதராபாத்:
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிஹெச்டி மாணவர் ரோஹித் வேமுலா விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மாணவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்தில் அமைதி பேரணி நடத்தினர். இந்த நிகழ்ச்சியை வீடியோ, புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயிலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் வெள்ளை கோடு போடப்பட்டது. இந்த கோட்டுக்கு பின்னால் நின்று வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கெடுபிடி விதிக்கப்பட்டது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘பல்கலைக்கழக வளாகத்திற்குள் வேண்டுமானால் அனுமதியை மறுக்கலாம். ஆனால், பிரதான நுழைவு வாயில் அருகே வருவதற்கு தடை வதித்தது சரியல்ல. இத்தகைய முடிவை அவர்கள் எப்படி எடுக்கலாம். ஒரு பொது பல்கலைக்கழகம் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக எப்படி இவ்வாறு செயல்படலாம்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது தெரிந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று இரவு வரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இன்று காலை திடீரென பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது சரியல்ல ’’ என்று தெரிவித்தனர்.
மதியம் 3 மணிக்கு பிரதான நுழைவு வாயில் அருகே நின்ற பத்திரிக்கையாளர்களை பாதுகாவலர்கள் விரட்டியடித்தனர். ரோஹித் மரணமடைந்த 2016ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நிர்வாக பத்திரிக்கையாளர்களை வளாகத்திற்கு அனுமதிக்க மறுத்து வருகிறது.
ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வளாகத்திற்குள் சென்ற ஒரு பத்திரிக்கையாளரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.