அரியானா,

தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படத்திற்கு ஏற்கனவே 5 வட மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில், தற்போது அரியானா மாநிலத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு பத்மாவத் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில்  பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.

ராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு படத்தை வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர்களை மிரட்டி வருகிறது.

இந்நிலையில் படத்தை மறுதணிக்கை செய்து இந்திய தணிக்கைக் குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 26ந்தேதி நாடு முழுவதும் பத்மாவத் (பத்மாவதி) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் உலகெங்கும் 60 நாடுகளில் இந்தப் படம் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற  மாநிலங்களில் இந்தப் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.   சமீபத்தில் குஜராத் மாநில முதல்வர்  விஜய் ருபானி இந்தப் படம் குஜராத்தில் வெளியாகாது என அறிவித்துள்ளார்.   கோவா மாநில போலீசார் இந்தப் படத்தை வெளியிட தடை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பீகாரிலும்  இப்படத்தை தடை செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தற்போது அரியானா  மாநிலமும் படத்தை தங்களது மாநிலத்தில் வெளியிட தடை விதித்துள்ளது.