சென்னை
ஆதார் எண்ணை இணைக்காத சமையல் எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உத்தரவுப்படி சமையல் எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வந்தன. அத்துடன் அவ்வாறு ஆதார் எண்ணை அளிக்காதவர்களின் சமையல் எரிவாயு இணைப்பை துண்டிக்கப் போவதாகவும் நிறுவனங்கள் அறிவித்தன. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் செய்யக் கூடாது என ஆணை இட்டது.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் ஆதார் எண் கட்டாயம் என்பதற்கான காலக் கெடு இந்த வருடம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட்ட அனைத்து மத்திய மாநில அரசு நிறுவனங்களூம் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
தற்போது எரிவாயு நிறுவனங்கள் ஆதார் எண்ணை வழங்காத வாடிக்கையாளர்களின் எரிவாயு இணைப்பை துண்டித்துள்ளன. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இது குறித்து எரிவாயு முகவர்கள், “ஆதார் எண்ணை அவசியம் அளிக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இணைப்பு புதுப்பிக்கபடும்” என கூறி உள்ளனர்.