சென்னை

பொங்கலை ஒட்டி இயங்கப்பட உள்ள விரைவு ரெயில்களின் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப் பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.    இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் விசேஷ ரெயில்களை இந்திய ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.   அதைப் போல தற்போதும் விசேஷ ரெயில்களை இயக்க முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.   சுவிதா விசேஷ ரெயில் என்னும் பெயரில் இயங்கும் இந்த விசேஷ ரெயில்களின் பயணக் கட்டணம்  விமான டிக்கட்டுகளை விடவே அதிகமாக உள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்ல ஜனவரி 12ஆம் தேதி அன்று இயங்க உள்ள விசேஷ ரெயிலில் ஏசி 2 டயர் டிக்கட்டின் விலை ரூ. 4450 ஆகவும், ஏசி 3 டயர் டிக்கட்டின் விலை ரூ.3155 ஆகவும் உள்ளது.    சாதாரண ரெயிலில் இதே வகுப்புக்கு ரூ. 1150 மட்டுமே உள்ள இந்த ரெயிலில் ரூ.3300 அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  அதே போல சாதாரணமாக ரூ.815 என உள்ள ஏசி 3 டயர் வகுப்புக்கு ரூ.2340 அதிகம் வசூலிக்கப்படுகிறது.

அதே தேதியில் விமானத்தில் எகானமி வகுப்பு டிக்கட்டின் விலை ரூ.3950 மட்டுமே உள்ளது.     அதே போல ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.315 வசூலிக்கப் படும் போது இந்த ரெயில்களில் ரூ.1105 வசூலிக்கப் படுகிறது.

இதே போல் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்ல ஏசி 2 டயர் வகுப்பு கட்டணம்  ரூ.5300 எனவும் ஏசி 3 டயர் வகுப்புக்கு ரூ.3745 எனவும் ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.1315 எனவும் டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

”இது போல பண்டிகைக் காலங்களை முன்னிட்டு விசேஷ ரெயில் என்னும் பெயரில் பயணிகளிடம் பகற்கொள்ளை நடைபெறுவது கண்டிக்கத் தக்கது” என ரெயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.