
பெங்களூரு
பெங்களூருவில் உள்ள பாருடன் சேர்ந்த உணவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள புகழ் பெற்ற வளாகங்களில் ஒன்று கும்பாரா சங்க கட்டிடம். இதன் தரைத் தளத்தில் மது அருந்தும் வசதியுடன் கூடிய ஒரு உணவு விடுதி உள்ளது. இதன் பெயர் கைலாஷ் பார் அண்ட் ரெஸ்டாரெண்ட் ஆகும்.

இந்த உணவு விடுதியில் இன்று அதிகாலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த உணவு விடுதியில் உள்ள பணியாளர்கள் உறங்கிக் கொண்டு இருந்ததால் அவர்களால் தீ பிடித்ததை அறிய முடியவில்லை. கடும் புகை அந்த கட்டிடத்தில் இருந்து வருவதைக் கண்ட சாலுவகுமார் என்பவர் அதிகாலை 3.10 மணிக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக 20 தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பணியாளர்களும் தீயில் கருகி உயிர் இழந்துள்ளனர். அவர்கள் சாமி (வயது 23), பிரசாத் (வயது 20), மகேஷ் (வயது 35), மஞ்சுநாத் (வயது 45), மற்றும் கீர்த்தி (வயது 24) ஆகியோர் ஆவார்கள். அவர்களின் உடல்கள் அருகிலுள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி பசவப்பா “நாங்கள் சென்ற போது தீ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டு இருந்தது. தீயைக் கட்டுப்படுத்தி யாரும் உள்ளே இருக்கிறார்களா என கண்டறிய சென்றோம். நாங்கள் ஐந்து தீயில் க்ருகிய உடல்களை கண்டு எடுத்தோம். தற்போது தீ முழுவதுமாக அணைக்கப் பட்டு விட்டது. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை” என கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]