தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த “கல்யாணராமன்” என்ற பெயரில் முகநூலில் இயங்கும் நபர், “டாக்டர் தமிழிசை அவர்கள் 27ம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மை என்றால் அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து தமிழிசைக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக புதிய நபர் நியமிக்கப்படுகிறாரோ என்ற யூகம் எழுந்தது.
இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த டிசம்பர் (2017) இருபத்தியேழாம் தேதியே தமிழிசை ராஜினாமா செய்தவிட்டதாக அந்த நபர் பதிவிட்டுள்ளார். அடுத்ததாக டிசம்பர் 28ம் தேதி ராஜினாமா செய்ததாக பதிவிட்டுள்ளார்.
ஆனால் கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தலைவராக சிவசெந்தமிழ் என்பவரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் மாதத்திலேயே ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தால், எப்படி மாவட்டத் தலைவரை மாற்ற டியும்?
தங்களது விருப்பத்தை இது போன்ற யூகங்களைக் கிளப்பி விடுவதன் மூலம் சிலர் தீர்த்துக்கொள்கிறார்கள்.
பாஜக என்பது வெளிப்படையான செயல்பாடுள்ள கட்சி. ஆகவே தலைவர் மாற்றங்கள் என்பதும் வெளிப்படையாகவே நடக்கும்” என்றனர்.
தமிழிசையை தொடர்புகொள்ள அவரது எண்ணுக்கு தொடர்ந்து முயற்சி செய்தோம். சுவிட்ச்டு ஆப் என்றே “பதில்”(!) வந்தது.