டில்லி:
ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று தற்போது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் நடத்திய கெத்து ஆப்ரேஷனில் இந்த உண்மை தெரியவந்து இருக்கிறது.
ஆனால் போலீஸ் மோசடி நபர்களை பிடிக்காமல் பத்திரிக்கையாளரை கைது செய்து இருக்கிறது. ஆப்ரேஷன் ஆதார் ‘தி டிரிபியூன்’ என்று ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் தான் இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. யாருடைய ஆதார் விவரம் கேட்டாலும் கொடுக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று பஞ்சாப்பில் இயங்கி வந்து கொண்டிருறது. அந்த குழுவில் இந்த பத்திரிக்கையை சேர்ந்த ராச்னா கைரா எனபவர் ஸ்டிங் ஆப்ரேஷனுக்காக சேர்ந்து இருக்கிறார்.
அவர் கொடுத்த 800 ரூபாய் பணத்திற்கு அவருக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து நபர்களின் ஆதார் விவரங்களையும் பெறக்கூடிய வகையில் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்து பிரச்சனையானது. எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவித்தன. ஆதார் அமைப்பிற்கும், மத்திய அரசிற்கும் எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அளவில் பிரச்சனை ஆனது. மேலும் இது போல் பல குழுக்கள் செயல்படுவதாக வெளியான தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மோசடியை அம்பலப்படுத்திய போலீஸ் ராச்னா கைரா மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 3க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. முதலில் இந்த மோசடியை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.