தென் இந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது.
இதற்காக ரஜினி, கமல் உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்கள் மலேசியா சென்றுள்ளனர்.
மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இந்த கலைவிழாவில் நடனம், நகைச்சுவை, நடிகர் – நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா என்று ஏற்பாடுகள் தடபுடலாக இருக்கின்றன. நட்சத்திரக் கிரிக்கெட்டும் உண்டு.
சரவணா ஸ்டோர்ஸ், லைகா ஆகிய நிறுவனங்கள் கட்டிட நிதிக்கு பெருந்தொகை அளித்திருக்கின்றன.
இத்தனை ஏற்பாடுகள் லைம் லைட்டில் நடந்துகொண்டிருக்க… நடிகர் நடிகைகள் சிலர் மவுனமாக தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார்கள்.
விஷால், நாசர் தலைமையிலான நடிகர் சங்க பொறுப்பாளர்கள்தான் முழு ஏற்பாடும் என்பதால் தங்களுக்குப் பிடிக்காத நடிகர், நடிகைகளை புறக்கணித்துவிட்டார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து நடிகர் ஒருவரிடம் பேசினோம். அவர், “மூத்த நடிகர் ராதாரவி தலை சிறந்த நடிகர் என்பதோடு, கூட்டத்தை வசீகரப்படுத்தும் பேச்சாற்றலுக்கும் சொந்தக்காரர். ஆனால் இவர் எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்று விஷால் டீம் புறக்கணித்துவிட்டது.
நீண்ட நாட்கள் சங்கத்தில் பொறுப்பு வகித்த ராதாரவியையே புறக்கணித்துவிட்டார்கள் என்றால் மற்ற நடிகர்கள் எம்மாத்திரம்” என்றார் வருத்தத்தோடு.
இந்த நட்சத்திர கலைவிழாவுக்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் தெரிவித்தது இது:
அவர் நம்மிடம், “யார் யாரை அழைக்க வேண்டும் என்று லிஸ்ட் கொடுங்கள் என்றோம். அதையே சங்க நிர்வாகம் சரிவர தரவில்லை. நினைத்து நினைத்து பெயர்களைக் கொடுத்தார்கள்.
ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நடிக – நடிகர் பட்டியல் இருக்கும். அதைவைத்து ஒரே பட்டியலாக, எந்தெந்த நடிகர் நடிகைகளை கலை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாதா?
விமான டிக்கெட் புக் செய்வதில் ஒரே குளறுபடி. சிலருக்கு விமானத்தில் சிறப்பு வகுப்பு.. பலருக்கு சாதாரண வகுப்பு டிக்கெட் என்று பதிவு செய்திருந்தார்கள். இதனால் பல நட்சத்திரங்களுக்கு வருத்தம்” என்றார்.
இயக்குநர் ஒருவர் கூறியது இன்னும் வருத்தத்தை ஏற்படுத்தும் விசயம் இது.
“நடிகர் – இயக்குநர் பார்த்திபனுக்கும் கலை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிலும் புதுமை செய்யும் அவர், இந்த விழாவில் எப்படி ஃபர்பாம் செய்யலாம் என்று சிந்தித்து பிராக்டிஸ் செய்து வைத்திருந்தார். அது அவரது வழக்கம். அந்த அளவுக்கு எதிலும் ஈடுபாட்டுடன் இறங்குவார்.
அவரும் வீட்டிலிருந்து கிளம்பி விமான நிலையம் வர தயாரான நிலையில்தான் நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கிறது… பார்த்திபனுக்கு டிக்கெட் போடவில்லை!
உடனே, அவருக்கு போன் செய்து, “ஸாரி.. உங்களுக்கு டிக்கெட் போட மறந்துவிட்டோம். வரவேண்டாம்” என்று தெரிவித்தது நடிகர் சங்க டீம்.
அவருக்க எந்த அளவுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்?” என்று வேதனைப்பட்டார் அந்த இயக்குநர்.
அழைப்பு விடுக்கப்பட்டும், சங்க நிர்வாகத்தினரின் அணுகுமுறை சரியில்லாததால் கலை நிகழ்ச்சிக்குச் செல்லாத நடிகர் ஒருவர் நம்மிடம் ஒரு தகவலைச் சொன்னார்:
“இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜையும் கலைவிழாவுக்கு அழைத்திருந்தார்கள். அவரும் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார்.
விமானம் புறப்படும் நேரத்துக்கு சரியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துவிட்டார். அவருக்கும் டிக்கெட் போடவில்லை என்பது சங்க நிர்வாகிகளுக்கு அப்போதுதான் தெரிந்திருக்கிறது.
அசடு வழிந்தபடி ஸாரி சொல்லியிருக்கிறார்கள். அவமானத்துடன் திரும்பினார் மனோஜ்.
மனோஜ் ஒரு நடிகர் என்பது மட்டுமல்ல… மிகச் சிறந்த இயக்குநரான பாரதிராஜாவின் மகன். அவருக்கே இந்த நிலை” என்று ஆதங்கத்துடன் சொன்னார் அந்த நடிகர்.
புரடக்சன் மேனேஜர் ஒருவர் இது குறித்து நம்மிடம் பேசும்போது, “இந்த மலேசிய கலை விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்று பார்க் நட்சத்திர ஓட்டலில் ஒரு மாதம் ரூம் போட்டு யோசித்தது விசால் டீம்!
இதெல்லாம் ஒரு உதாரணம்தான். இன்னும் குளறுபடிகள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக வெளிவரும்” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.