சென்னை:

ஜினி ரசிகர் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று மன்ற பொறுப்பாளர் சுதாகர் அறிவித்துள்ளார்.

ரஜினி – சுதாகர்

கடந்த டிசம்பர் 31ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து  இது குறித்து தனியார் தொலைக்காட்சிகளில் கிட்டதட்ட தினந்தோறும் விவாதங்கள் நடந்துவருகின்றது. அவற்றில் ரஜினி ஆதரவாளர்கள் என்று சிலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர், ஒரு அறிக்கைவிடுத்துள்ளார். அதில், “ரஜினி அரசியல் குறித்து தொலைக்காட்சிகளில் பல விவாதங்கள் நடந்துவருகின்றன. அதில் ரஜினி ரசிகர் மன்றம சார்பாக என்று சிலர் பேசி வருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் தொலைக்காட்சிகளில் கருத்து கூற யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அப்படி விவாதங்களில் தற்போது பங்கேற்று பேசுபவர்களின்  கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, “இது போன்ற விவாதங்களில் கலந்துகொள்ளும் தனி நபர்கள் ரஜினி ரசிகர் என்றோ, ரஜினி ஆதரவாளர் என்றோ குறிப்பிட வேண்டாம்” என தொலைக்காட்சிகளுக்கும் சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “.ரஜினி   அறிவித்தது போல, மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசாமல், கட்சி அறிவிப்பு வரும்வரை  நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும்’ என்று மன்ற உறுப்பினர்களுக்கு சுதாகர் தெரிவித்துள்ளார்.