சென்னை:

ர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விவரங்களை ஆய்வு செய்ய செலவின பார்வையாளர்கள் வரும் 23ம் தேதி தொகுதிக்கு வருகிறார்கள்.  டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தினகரனின் ஆர்.கே. நகர் வெற்றிக்கு எதிராக டைம்பாம் வெடிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சொல்லியிருந்தது இதைத்தானா என்ற யூகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி நடந்தது.  இங்கு ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் வாக்காளர்களுக்கு தலா 6 ஆயிரம் கொடுத்ததாக புகார் கிளம்பியது. அதே நேரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், 20 ஆயிரம் ரூபாய் வரை அளித்ததாக புகார் எழுந்தது.  அந்த பணத்துக்கு டோக்கனாக இருபது ரூபாய் நோட்டு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அந்நோட்டுகளை விநியோகம் செய்த சிலர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

இது தொடர்பான முழு அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடந்த வியாழக்கிழமை வழங்கினார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் செலவின பார்வையாளராக இருந்த ஷிவ் ஆஷிஸ், குமார் பிரணவ் ஆகியோர் வருகிற 23ம் தேதி சென்னை வருகின்றனர். தேர்தல் சட்ட விதிமுறைப்படி ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த 30 நாட்களுக்குள் இறுதி செலவு அறிக்கையை வெற்றி பெற்ற எம்எல்ஏ உட்பட 59 வேட்பாளர்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

ஆக, வரும் 24ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்ததாக செலவின பார்வையாளர் அறிக்கை அளித்தால் புகாருக்கு உள்ளான  வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தவறு செய்திருந்தார் என்பது நிரூபணம் ஆனால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். அவர் மூன்று  ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்.

ஆக, இதைத்தான், தினகரன் வெற்றிக்கு எதிரான டைம் பாம் என்று எச்.ராஜா தெரிவித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.