திருச்சி,

ஜினி அறிவித்துள்ள  ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திருச்சியில் மணியம்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய வீரமணி இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆத்மா, ஆன்மிகம் என்பது பித்தலாட்டம். இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்கிறார்கள். உணர்வுகளை உருவாக்கும் ஆத்மா, கூடு விட்டு, கூடு பாயுமாம் என்பது போல் பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். எனவே ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம் என்றும் அதிரடியாக கூறினார்.

மேலும்,  பெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதம் மக்களை பிரிக்கிறது. ஆனால் இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான் என்றும் கூறினார்.

அதைத்தெடர்ந்து மாநாட்டில் கலந்துகொண்டார்.  மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்  திராவிடர் கழகம், ஆந்திர நாத்திக மையம் சார்பில் உலக நாத்திகர் தொடங்கி வரும் 7ந்தேதி வரை  நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்த திராவிடர் கழக தலைவர் வீரமணி  பேசியதாவது:-

இந்த மாநாடு நடத்தப்படுவது கடவுள் மறுப்பு மட்டும் அல்ல, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

மேலும், மனித குலத்தின் உரிமைகளை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான்.  நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது.

இந்தியாவில் நிலவி வரும் சாதி, தீண்டாமைகளை அகற்ற முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்

இந்த மாநாட்டில் திமுக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றிய லண்டன் தலைமை செயல் அதிகாரி கேரே மெக்கலாண்ட் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.