டில்லி
தர்மபுரி – மொரப்பூர் ரெயில் இணைப்பை செயல்படுத்தக் கோரி ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை அன்புமணி சந்தித்தார்.
பாமக வின் இளைஞர் அணித்தலைவரான அன்புமணி தருமபுரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்த மாவட்டட்த்தில் தருமபுரி – மொரப்பூரை இணைக்கும் ரெயில் பாதை அமைப்பு வெகுநாட்களாக நிலுவையில் உள்ளது. இந்த இணைப்பை உடனடியாக விரைந்து செயல்படுத்தக் கோரி மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை அன்புமணி இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து நான் இதுவரை ரெயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இந்த திட்டத்துக்காக 14 முறை சந்தித்துள்ளேன். இது 15ஆவது முறை ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகர்களும் மாநிலத் தலைநகரான சென்னையுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளன. தர்மபுரி – மொரப்பூர் இணைப்புத் திட்டத்தை செயல் படுத்தினால் இந்தக் குறை நீங்கும். எனவே உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்து அதிகாரிகளை அழைத்து தற்போதைய நிலமையை கேட்டறிந்தார். இந்த திட்டத்தை தொடங்ல வசதியாக நிலம் கையகப்படுத்தல் போன்ற அடிப்படை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.