சென்னை

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் நிதி வசதி இல்லை எனில் ஆட்சியை விட்டு விட்டு போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்துக் கழகங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.     இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக சிஐடியூவின் சவுந்தரராஜன் மற்றும் தொமுச வின் சண்முகம் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “பிரச்னை தீரும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம்.  அரசின் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதில்லை.     இதுவரை நீதிமன்றத்திலிருந்து எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை.    இந்த உத்தரவு எங்கள் தரப்பைக் கேட்காமலே பிறப்பிக்கப்பட்டுள்ளது.    எங்களுக்கு உத்தரவு வந்த பின் திங்கட்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் எங்கள் தர்ப்பு வாதங்களை எடுத்து வைத்து வாதாட திட்டமிட்டுள்ளோம்.

ஊதியம் தரக்கூட முடியாமல் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறுகின்றனர்.   ஊதியத்துக்குக் கூட நிதி வசதி ஏற்படுத்த முடியாதவர்கள் ஆட்சியை விட்டு விட்டு வீட்டில்  போய் அமர்ந்துக் கொள்ளட்டும்.

இந்த வேலை நிறுத்தத்தினால் பொதுமக்கள் சிரமப்படுவதற்கு நாங்களும் வருந்துகிறோம்.   இந்த போராட்டத்துக்குக் காரணம் நாங்கள் அல்ல,  இந்த அரசுதான் காரணம்.   நாங்கள் எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்னும் நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.   எதையும் சட்ட்ட ரீதியாக தயாரிக்க தயாராக உள்ளோம்”  என இருவரும் தெரிவித்துள்ளனர்.