டில்லி,
காஷ்மீரில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்பு படை முகாம்மீது நள்ளிரவில் பயங்கரவாதிகள் தாக்கதல் நடத்தினர். இதில் 5 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய காஷ்மீர் மாநில, பா.ஜ. – எம்.பி., நேபாள் சிங், ”ராணுவத்தில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுகின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களும் இறக்க நேரிடுகிறது. இது இயல்பான விஷயம்… சண்டையில், ராணுவ வீரர்கள் உயிரிழக்காத நாடு உண்டா?” என்றும் கூறியிருந்தார்.
பாஜக எம்.பி.யின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாஜக எம்.பி.யான நேபாள் சிங், தன் கருத்திலிருந்து பின்வாங்கி விளக்கம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. ‘என் பேச்சில் தவறு இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும், ராணுவ வீரர்களை, குண்டுகளில் இருந்து பாதுகாக்க, விஞ்ஞானிகள் புதிய கருவிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறி உள்ளார்.