
டில்லி
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராணுவ வீரர்கள் குறித்த தனது தவறான பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான நேபால் சிங் சமீபத்தில் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் புல்வானா பயிற்சி முகாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அவர், “ராணுவம் என்றால் வீரர்கள் மரணம் அடைவது தினசரி நடப்பது தான். சண்டையின் போது ராணுவ வீரர்கள் மரணம் அடைவதே இல்லை என்னும் நிலை எந்த நாட்டில் உள்ளது? கிராமத்தில் ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் கூட படுகாயத்திலும் மரணத்திலும் முடிகிறது. இது வரை துப்பாக்கிக் குண்டுகளை சமாதானப்படுத்தி ராணுவ வீரர்களை தாக்கமல் செய்யக்கூடிய ஒரு கருவி கண்டுபிடிக்கப்படவில்லை” என பதிலளித்தார்.
இந்த பதில் நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. பல டிவிட்டர் உபயோகிப்போர் ராணுவத்தினரை நேபால் சிங் இவ்வாறு கேவலம் செய்ததற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். அதனால் தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் தனது செய்தியில், “நான் ராணுவத்தினரை அவமானப் படுத்தும் வகையில் ஏதும் சொல்லவில்லி. நான் எப்போதும் ராணுவ வீரர்களில் ஆதரவாளன் தான். அவர்கள் எனது பேச்சினால் வருத்தம் அடைந்ததற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். நான் தவறான அர்த்தத்தில் எதையும் கூறவில்லை. மேலும் பலர் ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]