பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் கடந்த மாதம் சம்மன் அனுப்பியது.
தற்போது சசிகலா மவுன விரதத்தில் இருப்பதால், அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராவார் என கூறப்படுகிறது.
ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெ.தோழி சசிகலா மற்றும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 22ந்தேதி சம்மன் அனுப்பியது.
இந்த விசாரணை ஆணையத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், மருத்துவர்கள் உள்பட தினசரி பலர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கும், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினனரும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மற்றொரு குற்றவாளியான இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் விசாரணை கமிஷன் முன்பு சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவர் தற்போது மவுன விரதம் கடைபிடித்து வருவதால், அவருக்கு பதில் அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.